மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் பெயதுள்ள கனமழையின் காரணமாக, வைகையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், விவசாய நிலங்களில் புகுந்துள்ள தண்ணீரை அகற்றவும், கண்மாய்க்கு வரும் உபரி நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது..,
மதுரை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, வைகை அணையில் இருந்து வெளியேறும் வெள்ளநீரானது பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து, திருமங்கலத்தில் உள்ள கள்ளிக்குடி ஒன்றியம், தும்பக்குளம் வழியாக வலையங்குளம் கண்மாய்க்கும் தண்ணீர் சென்றதால, அங்குள்ள விவசாயப் பெருமக்கள் நெல், பூ உள்ளிட்ட விவசாயப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்த நிலையில், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால், அவர்கள் பயிரிட்டுள்ள நெல், பூ போன்ற பயிர்கள் அழுகி விட்டன என்றும், தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆகவே, விவசாயிகளின் வேதனையைத் தீர்க்கும் பொருட்டு, விவசாய நிலங்களில் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றவும், கண்மாய்க்கு வரும் உபரி நீரை முறைப்படுத்தி ஆற்றுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.