இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களை கைபற்றி வருகின்றது. பல நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து வருகின்றது. அப்படி முதலீடு செய்ய திட்டமிட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் பியூச்சர் ரீடைல். ஆனால் பியூச்சர் – ரிலையன்ஸ் ஒப்பந்தத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருந்து வந்தது அமேசான்.
இது தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ப்யூச்சர் குழுமத்தின் கூட்டாளரான அமேசான் தனது கூட்டாளருக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம், தனது இடைக்கால உத்தரவில் பியூச்சர் குழு தனது சில்லறை வணிகத்தினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3.38 பில்லியன் டாலர் பங்குகளை விற்க தற்காலிகமாக தடை விதித்தது. அமெரிக்காவின் ஈ -காமர்ஸ் நிறுவனமான அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 49% பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கிஷோர் பியானிக்கு சொந்தமான பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது.
இது கடன் அதிகரித்ததை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, கடந்த சில காலாண்டுகளாகவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதனையடுத்து ப்யூச்சர் குழுமத்தினை கையகப்படுத்த 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் அமேசான் பிரச்சனை காரணமாக இழுபறி நிலையே நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் செயல்பாடுகளை கைப்பற்றியுள்ளதாகவும், அதோடு அதன் மிகப்பெரிய கடைகளான பிக் பஜார் உள்ளிட்ட சில கடைகளை கையகப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பியூச்சர் குழுமத்தினால் வேலையிழந்த ஊழியர்களுக்கு, ரிலையன்ஸ் ரீடெயில் திரும்ப வேலையளித்து சம்பளம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிகின்றது. ஏற்கனவே பெருத்த கடன் பிரச்சனையில் உள்ள பியூச்சர் குழுமம் 200 கடைகளுக்கு மேற்கொண்டு பணம் கொடுத்து சமாளிக்க முடியாத நிலையில், அதனை ரிலையன்ஸ் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி ரிலையன்ஸ் கையகப்படுத்தாவிட்டால், இந்த 200 கடைகளும் மூடப்படும் என்றும் கூறப்படுகின்றது.