• Fri. Apr 19th, 2024

ராவணகோட்டம்- விமர்சனம்

Byதன பாலன்

May 14, 2023

இரு பிரிவு சமூகத்துக்குள் வரும் சரிவுகளும் அதற்குப் பின் உள்ள அரசியலும் தான் ராவணகோட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் மெயின் தலக்கட்டு பிரபு. அவரின் உற்ற நண்பர் இளவரசு. பிரபுவின் கட்டுப்பாட்டில் ஊர் மொத்தமும் இருக்க.. அந்தக் கட்டுப்பாடு லோக்கல் அரசியல்வாதி அருள்தாஸ் & மினிஸ்டர் தேனப்பனுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. ஊரை இரண்டாகப் பிரிக்கும் வேலையில் அருள்தாஸின் அல்லக்கை ஒரு ப்ளான் போடுகிறார். அந்தப் பிளானில் வந்து பிரபுவின் அனுதாபியான சாந்தனுவும், இளவரசின் மகன் சஞ்சய் சரவணனும் சிக்குகிறார்கள். பகடைக்காயாக கயல் ஆனந்தி மாட்டுகிறார். இறுதியில் இந்நிலவரம் எப்படி கலவரமாக மாறுகிறது என்பதே கதை

கதையின் நாயகனாக சாந்தனு தனது முழு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். இருந்தும் பல இடங்களில் ஓவர்டோஸ். சாந்தனுவின் நண்பராக வரும் சஞ்சய் சரவணன் கவனிக்க வைக்கிறார். கயல் ஆனந்தி கண்கலங்கினாலே நமக்கு மனம் கலங்கி விடுகிறது. எம்.எல்.ஏ வாக அருள்தாஸ் கச்சிதமாக நடித்துள்ளார். பிரபு தலைமைக்கேற்ற கம்பீரத்தோடு இருந்தாலும் அவரது கேரக்டர் வடிவம் வாயிலாக இயக்குநர் சுயஜாதி பெருமை பேசியிருப்பது நெருடலாக இருக்கிறது. இளவரசு கேரக்டரை கூடுமான வரைக்கும் அடிமை வாழ்வை ஒத்துக்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளார் இயக்குநர். இளவரசுக்கு இந்த விபரீதம் புரிந்தோ புரியாமலோ நடித்துள்ளார். ஒற்றைக் கையோடு வரும் ஒரு கேரக்டர் மட்டுமே படத்தில் தனித்துத் தெரிகிறது

பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே பெரிய சுரத்தில்லை. ஒளிப்பதிவில் ராமநாதபுரத்தின் வறண்ட பூமி அப்படியே கண்முன் நிற்கிறது. சண்டைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.

சரி படத்தின் மெயின்மேட்டருக்கு வருவோம். படத்தில் பிரபு கேரக்டரை அறிமுகப்படுத்தும் போதே பல அரசியல் தலைவர்களின் தலைகள் பிரபு தலையோடு வருகிறது. அதாவது பிரபு எல்லாச் சாதிக்குமானவர் என்பதன் குறியீடாம். But அதில் காமராஜர் மட்டும் மிஸ்ஸிங். (கதையோட மெயின் மேட்டரில் சீமக்கருவேல மரங்களால் வரும் பாதிப்புகள் காட்டப்படுவதால் காமராஜர் தலைவர்கள் கேட்டகிரியில் சேர்க்கப்படவில்லை. மேலும் முத்துராமலிங்கனார் கைது பிரச்சனையில் காமராஜர் செயல்பட்ட விதமும் இயக்குநருக்கு ஒப்பில்லாததால் காமராஜர் கிட்டத்தட்ட வில்லனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். சீமக்கருவேல மரங்கள் மூலம் ராமநாதபுர மாவட்டத்தை வஞ்சிக்க எண்ணியவர் காமராஜர் என்ற தொனியை ஸ்ட்ராங்காக ஊன்ற வேண்டும் என்ற இயக்குனரின் முனைப்புக்காகவும் காமராஜர் தவிர்க்கப்பட்டுள்ளார். சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சேர்க்காமல் விட்டதில் குறையுமில்லை. அது ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம்)

படத்தில் ஒரு பஞ்சாயத்து காட்சியில் கீழத்தெரு காரரான இளவரசு பேசுகிறார். “வெள்ளக்காரன் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு வேலையும் கொடுத்து கூலியும் கொடுத்து, பிறகு நிலமும் கொடுத்த வம்சம்டா இவங்க”

உடனே இளவரசின் சைடில் இருந்தே ஒரு கேரக்டர், “இதையே காலம் பூரா சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?” என்று கேட்கிறது. பின் ஒருவாறு அந்தப் பஞ்சாயத்து காட்சி முடிகிறது. பிரபு இளவரசுவை கையெடுத்து கும்பிடுகிறார். உடனே அடிமை சாசனப்பேர்வழியாக சித்தரிக்கப்பட்ட இளவரசு, “நீ ஏம்பா என்னைக் கும்பிடுற..நாங்க தாம்பா உங்க கால்ல விழுந்து கும்பிடணும்” என்று சொல்கிறார். இந்த வசனத்தை சென்சாரில் தூக்கி விடுவார்கள் என்று தெரிந்ததாலே, இளவரசுவை காலில் விழுவது போன்ற பாவனைகளைச் செய்யச் சொல்லி இயக்குநர் படமாக்கியிருக்கிறார். வாட் எ டெடிகேசன்ஸ். பெரும்பான்மையாக வாழும் இரு சமூகங்களைப் பற்றி ஒரு படைப்பாளி பேசும் போது அவர் யார் பக்கமும் நிற்கக் கூடாது. அறத்தின் பக்கம் மட்டுமே நிற்க வேண்டும். நடுநிலை என்பது இருவருக்கும் நடுவில் நிற்பது போன்றதல்ல..நேர்மையின் பக்கம் நிற்பது. இல்லை என்றால் நேர்மையை இருவரின் பக்கமும் தள்ளிவிடுவது. அதை கொஞ்சமும் உணராமல் பொதுவாக ஒரு பொதுக் கும்பிடைப் போட்டுவிட்டு, “நைசாக நாங்க கொடுத்ததால தான் நீங்க வாழ்ந்தீங்க. இப்ப எங்களுக்கு ஈக்குவலா வந்து பேசவும் அனுமதிச்சிருக்கோம். இதுக்கு மேல உங்களுக்கு என்னடா வேணும்? இதுக்கு மேல எப்படிடா அன்பை காட்ட முடியும்?” என்ற அதிகார ஆட்டத்தோடு தான் இந்தக் கதையை அணுகியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக பிரபு சாந்தனு சார்ந்த மேலத்தெருவில் ஒரு கெட்டவரும் இல்லை… இளவரசு சஞ்சய் சரவணன் சார்ந்த கீழத்தெருவில் ஒரு நல்லவரும் இல்லை. என்னங்கய்யா உங்க நியாயம்?

கலை படைப்பாக ராவண கோட்டம் எப்படி வந்திருக்கிறது? என்றால் திரைக்கதையில் துளி நேர்த்தியும் இல்லை. SI என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கும் சீரியஸ் சீனில் ஆடியன்ஸ் சத்தம் போட்டுச் சிரிப்பதை கேட்க முடிந்தது. படத்தின் தலைமை கதாப்பாத்திரத்தை பின் தொடரும் எண்ணத்தை நமக்கு வரவைக்க தவறியதிலே படம் தரமில்லாத பாதைக்குச் செல்லத் துவங்கிவிடுகிறது. பல வருடங்கள் படிப்படிப்பில் இருந்த படம். வருடத்திற்கு வருடம் கதை சொல்லலில் புதிய அணுகுமுறை வந்துகொண்டிருக்கும் தமிழ்சினிமாவில் இன்னும் அரதப்பழசான இந்தமாதிரியான கதை சொல்லல் தேவையா? படத்தின் முதல் காட்சியிலே படத்தின் முடிவுக்காட்சி இதுதான் என்பது விளங்கி விடுகிறது. ஒரு ஒற்றைக் கை கேரக்டரின் கோள்மூட்டும் இடங்கள் மட்டுமே படத்தில் சின்ன சுவாரஸ்யம். மற்றபடி தப்புத் தப்பாக கிண்டின உப்புமா இது.

மேல்கண்டம் கீழ் கண்டம் என்று அண்டத்தையே உண்டு இல்லை எனச் சொல்லும் கதைகள் வரும் காலத்தில் மேலத்தெரு கீழத்தெரு என பின்நோக்கிச் செல்கிறார் இயக்குநர். இந்தக் காலகட்ட இளைஞர்களுக்கு இப்படியான தெருக்களை அறிமுகம் செய்து வைப்பதற்குப் பதில் உருப்படியாக எதாவது சொல்லியிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *