இந்தியத் திரைப்படங்கள் என்றால் அவை இந்திப் படங்கள்தான் என்ற காலம் ஒன்றிருந்தது. அதை மலையாள சினிமாக்கள் உடைத்து வருவதைப் போல, தமிழ் சினிமாவும் உடைக்கத் துவங்கியுள்ளது.
சிறிய பட்ஜெட்டில் நிறைவான படங்களை நம்மவர்களும் செய்யத் துவங்கிவிட்டார்கள். அதற்கான சாட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்த ‘சிறுவன் சாமுவேல்’ படம். இது முதல் கன்னியாகுமரி வட்டார படமாகும்.
சிறுவன் சாமுவேலுக்கு ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும் என்பது பெருங்கனவு. அதை அவன் தன் வீட்டில் தெரிவிக்கிறான். வீட்டில் வசமான ஏச்சு கிடைக்கிறது. முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டே திரிகிறான் சாமுவேல்.
பின் பள்ளி வேன் ஓட்டும் டிரைவர் கிரிக்கெட் வீரர்கள் படம் மற்றும் அவர்களின் ஸ்கோரிங் ரேட்டிங் போட்ட கார்டுகளை சேர்த்தால் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்துப் போட்ட புதிய பேட் கிடைக்கும் எனச் சொல்கிறார்.
அதைக் கேட்டதும் சாமுவேல் கிரிக்கெட் கார்டுகளைச் சேர்க்கத் துவங்குகிறான். அதற்காக எந்த வழிக்கும் செல்ல அவன் தயாராக இருக்கிறான். முடிவில் அவன் புதிய பேட் வாங்கினானா.. இல்லையா? என்பதுதான் கதை.
சாமுவேலாக நடித்துள்ள சிறுவன் அஜிதன் பச்சைமுத்து அருமையாக நடித்துள்ளான். அவன் முகத்தில் தென்படும் ஏக்கம், கள்ளத்தனம், உறுதி ஆகிய எல்லா உணர்வுகளையும் நம்மால் திரையில் கண்டு ரசிக்க முடிகிறது.
படத்தில் தோன்றியுள்ள எல்லாக் கேரக்டர்களுமே தரமான நடிப்பை வழங்கி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு மதிப்பளித்துள்ளார்கள்.
மேலும், அவனது நண்பனாக வரும் விஷ்ணு அபாரமாக நடித்துள்ளான். அவன் கண்கள் வித்தியாசமான பார்வைகளில் கலக்குகின்றன. வேன் டிரைவராக நடித்துள்ளவர் முகத்தில் அச்சு அசல் கன்னியாகுமரி வாடை. ட்யூசன் அக்காவாக வருபவரும் அட்டகாசமான தேர்வு.
இப்படியான படங்களில் இசை வழியே கதை சொல்லவேண்டிய தருணங்கள் வரும் அதை உணர்ந்து இசை அமைத்துள்ளனர் இசை அமைப்பாளர்கள். கன்னியாகுமரியில் உள்ள பசுமைகளை தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்து நம் கண் முன்னே பசுமை விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். சபாஷ்! Live-ஆகவே வசனங்களை ஒலிப்பதிவு செய்துள்ளனர். அதைச் சரியாக ப்ளான் செய்து எக்ஸ்யூகீட் செய்த சவுண்ட் டிசைனருக்கு வாழ்த்துகள்.
கிரிக்கெட் பேட்டின் முனையில் எழுதிக் கொள்ளும் அளவிலான சின்னஞ்சிறு கதையை மிக அழகாக வளர்த்துச் சென்று க்ளைமாக்ஸில் அவ்வளவு வலிமையாக முடித்து எளிமையில்தான் வலிமை உள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் சாது.
பல கன்னியாகுமரி வட்டார வழக்கு வசனங்கள் புரியாமலே கடந்து போய்விடுகின்றன. முதல்பாதியில் இருந்த எதார்த்தம் மற்றும் டெம்போ பின்பாதியில் சற்றுப் பிசகியிருந்தாலும் க்ளைமாக்ஸ் படத்தைக் காப்பாற்றி விடுகிறது.
தமிழில் இப்படியான தரமான சினிமா முயற்சிக்கு கை கொடுப்போம்.
சிறார் சினிமா என்றாலும் நேர்த்தியில் ஓர் கறார் சினிமாதான் இந்தச் ‘சிறுவன் சாமுவேல்’!