• Wed. Apr 24th, 2024

கோடிகளை அள்ளிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல்..!

Byவிஷா

Nov 24, 2021

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில், ஒரு கோடியே 21 லட்சம் ரொக்கம், 94.500 கிராம் தங்கம், ஒரு கிலோ 900 கிராம் வெள்ளி கிடைத்திருப்பது கோயில் நிர்வாகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இக்கோயிலில், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.


ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தன.


உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.


கடந்த 2 மாதங்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாத சாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.


உண்டியல் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 21 லட்சத்து 99 ஆயிரத்து 250 ரூபாய் பணமும், 94. 500 கிராம் தங்கம், ஒரு கிலோ 900 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *