இளைஞர்களின் செல்ஃபி மோகத்தாலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களை பெற்றோர்கள் திட்டுவது என உப்புச்சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் குகையிலேயே குதிக்க முயற்சி செய்வது குறித்த வீடியோ வைரலாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்கவரி சேனலில் வருவது போல கொடிய மிருகங்களிடம் மோதக் கூட இந்த வைரல் இளைஞர்கள் சிறிதும் தயங்குவதில்லை. சமீபத்தில் கொடிய பாம்பை கையில் பிடிக்க முயன்ற இளைஞர் அந்த பாம்புக்கே பலியான சம்பவம் நாடறிந்த சம்பவம். மேலும், பாம்பு கறியை உண்ட மனிதரின் மரணம். காட்டு யானைக்கு முன்னர் செல்ஃபி எடுக்க முயற்சித்தவரின் பரிதாப நிலை குறித்தும் நாம் கேள்விப்பட்டதுண்டு. புலி குகைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் முயற்சியில் தவறி விழுந்து புலிக்கு பலியான இளைஞர் குறித்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் நேற்று ஒரு இளைஞரின் துணிச்சலான செயல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென அங்குள்ள சிங்க குகைக்கு மேல் எறியுள்ளார். பாறைகள் மேல் லாவகமாக நடந்து சென்ற அந்த இளைஞர் மெல்ல மெல்ல நகர்ந்து குகைக்குள் குதிக்க முயற்சி செய்துள்ளார். இதை கண்ட பூங்கா நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பார்வையாளர்கள் அனைவரும் பயத்தில் உறைந்திருக்க அந்த இளைஞரை ருசி பார்க்க சிங்கமும் ரெடியாகி விட்டது. அப்போது சுதாரித்துக்கொண்ட பூங்கா காப்பாளர்கள் சிங்கத்தின் குகை கதவை திறந்து அதை திசை திரும்பியுள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பாறைகள் மீதிருந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.