• Thu. Mar 28th, 2024

சசிகலாவுக்காக அமித்ஷாவிடம் அரசியல் பேரத்தில் ரஜினிகாந்த்..!

சசிகலாவுக்காக அமித்ஷாவிடம் அரசியல் பேரத்தில் ரஜனிகாந்த் ஈடுபட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


சசிகலா சிறையிலிருந்த போதும், விடுதலையான பிறகும் தினகரனைத் தொடர்புகொண்டு சசிகலாவைப் பற்றி நலம் விசாரித்தவர் ரஜினிகாந்த். கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலால் முக்கிய பிரமுகர்கள் யாரையும் ரஜினி நேரடியாகச் சந்திக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைத் துறை விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.


அப்போது டெல்லி சென்ற ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் பற்றி விசாரித்துள்ளார்கள். அப்போது அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று ரஜினி சொல்லியதாகத் தகவல். விருது பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.


இந்த பின்னணியில்தான்… தன்னைப் பற்றி அவ்வப்போது நலம் விசாரித்த ரஜினியைச் சந்தித்து நலம் விசாரிக்க விரும்பியிருக்கிறார் சசிகலா. இதனைத் தொடர்ந்து, ரஜினியின் போயஸ் கார்டன்இல்லத்துக்குச் சென்றார் சசிகலா. இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். ரஜினியை வெகு நேரம் தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், பிறகுதான் ரஜினியைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஒரு சில நிமிடங்கள் உடல்நலம் விசாரித்துள்ளார் சசிகலா.


அந்தச் சில நிமிடங்களிலும் கண்கலங்கியபடி பேசிய சசிகலா, ‘இவர்களை நம்பி ஆட்சியையும் கட்சியையும் ஒப்படைத்துவிட்டு சிறைக்குப் போய்விட்டு வருவதற்குள் என்னை யார் என்று கேட்கிறார்கள், கட்சியை அழித்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்கு இருக்கும் தைரியம் பாஜக தலைமையும் மத்திய ஆட்சியும்தான். அவர்கள் ஆதரவு இருந்தாலும் இவர்களால் மக்களைச் சந்தித்து தேர்தலில் ஜெயிக்க முடியாது.


இந்த நிலையில் நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். கட்சியின் இந்த நிலைமையை பாஜக தலைமையிடத்தில் சொல்லுங்கள். எனக்கு ஆதரவு தரச் சொல்லுங்கள். 2024இல் எம்.பி தேர்தலில் அதிகமான எம்.பிக்களை வெற்றிபெற வைக்கிறேன். இதை நீங்கள் மேலே எனக்காக சொல்ல வேண்டும்’ என்று சசிகலா நேரடியாகவே ரஜினியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.


இதைக் கேட்ட ரஜினிகாந்த்தோ, ‘நான் அரசியலில் தலையிட மாட்டேன். இதைப் பத்தி யாரிடமும் கேட்கவும் மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டார். சசிகலாவை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, லதா ரஜினிகாந்த் மாடிக்குச் சென்று ரஜினியிடம் பேசிவிட்டு கீழே வந்திருக்கிறார். ‘கவலைப்படாதீங்க. தைரியமாக அரசியல் வேலையைப் பாருங்க. அவரை நான் சமாதானப்படுத்தி அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் பேசச் சொல்கிறேன். பிரிந்தவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்றேன்’ என்று உறுதி கொடுத்துள்ளார் லதா ரஜினிகாந்த்.


அரசியலில் ஒவ்வொரு ஆயுதத்தையும் அந்தந்த சமயத்தில்தான் பயன்படுத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சி செய்தபோது லதா ரஜினிக்காக பக்கத்து வீட்டுக்காரர் என்ற அடிப்படையில் பல விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறார் சசிகலா. அந்த வகையில் இப்போது தனது அரசியல் போராட்டத்துக்கு ரஜினியின் உதவி கிடைத்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறார் சசிகலா. அந்த வகையில்தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில்.


ரஜினி நேரடித் தேர்தல் அரசியலுக்கு வராவிட்டாலும் மறைமுக அரசியலில் இன்னும் செல்வாக்கோடுதான் இருக்கிறார்போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *