சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல்வரின் வருகையையொட்டி சேலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா நடைபெறும் சீலநாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலினை வரவேற்று கொடி தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் மூலம் சேலம் காமலாபுரம் வரும் முதல்வர், அங்கிருந்து காரில் சேலம் சீலநாயக்கன்பட்டி சென்று அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த அரசு விழாவில், 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், போக்குவரத்து துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, நெடுஞ்சாலைத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக்கல்வி துறை, கூட்டுறவு துறை, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல்துறை, பதிவு துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 12 துறைகளின் கீழ் ரூ.38.52 கோடி மதிப்பில் 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து விழாவில் மொத்தம் 261.39 கோடி திட்டப்பணி, நல உதவிகள் முதல்வரால் வழங்கப்பட உள்ளன.
இந்த விழாவில் கலெக்டர் கார்மேகம், அமைச்சர் கே.என்.நேரு, அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள், பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பல்வேறு துறை முதன்மை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.