பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் நலன் கருதியும் பட்டாசு தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய்த்துறையினர், தீயணைப்புத் துறையினர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், காவல் துறையினர் அடங்கிய சிறப்பு குழு முதன்மை தணிக்கை அலுவலர் திருப்பதி வெங்கடசாமி தலைமையில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர்.

கீழத்தாயில் பட்டி மற்றும் ராமுத் தேவன்பட்டியில் கடந்த ஆண்டு பட்டாசு விபத்து. நடந்த பட்டாசு ஆலைகளை முழுமையாக பார்வையிட்டனர். சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் இறந்த நபர்கள், காயம் அடைந்தவர்கள், குறித்து விபரம் கேட்டறிந்தனர். தொடர்ந்து குண்டாயிருப்பு கிராமத்தில் உள்ள புதிய உரிமம் பெற்ற பட்டாசு ஆலையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து துலுக்கன் குறிச்சியில் விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 52) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை ஆய்வு செய்தபோது ஆலையில் வருகை பதிவேடு பராமரிக்கப்படவில்லை, போர்மேன் யாரும் நியமிக்கப்படவில்லை, என்பது தெரிந்தது.

மேலும் அலுவலக அறையில் பாதுகாப்பு இல்லாமல் வெடிகள் வைத்திருந்ததும், பட்டாசு ஆலை சுத்தம் இல்லாமல் இருந்ததும் தெரிந்தது. உடனடியாக ஆலை மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பட்டாசு ஆலை பாதுகாப்பாக உள்ளதா என கேட்டறிந்தனர். ஆய்வு 30 நிமிடத்திற்கு மேலாக நீடித்தது.பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தது தெரிந்ததும் அருகில் உள்ள பட்டாசு ஆலைகள் உடனடியாக விடுமுறை விடப்பட்டு தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






