• Sun. Oct 6th, 2024

தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீர் பெண் மருத்துவர் மூழ்கிப்பலி!

ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை செப்.18:- புதுக்கோட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையில் இருந்து துடையூருக்கு செல்லக்கூடிய சாலையில் ஆளில்லா ரயில்வே கேட்டை மூடி சுமார் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு சுரங்கப்பாதை போல் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைக்கும் பொழுதே துடையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், ‘தரைப்பாலம் அமைக்க வேண்டாம். மேம்பாலம் வேண்டும்’ என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பொது மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் காவல்துறையை வைத்து பொதுமக்களை மிரட்டி இங்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில், மழை பெய்யும் நாட்களில் தரைப்பாலத்தில் மழை வெள்ளம் தேங்கிவிடும். இந்த வெள்ள நீரில் நீச்சல் அடித்துத்தான் துடையூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வர வேண்டிய நிலை.
அல்லது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடக்கக் கூடிய சாலையை சுமார் பத்து கிலோமீட்டர் வரை சுற்றி செல்லக் கூடிய நிலை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நார்த்தாமலை பொம்மாடிமலை துடையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த கனமழையால் பொம்மாடி மலையிலிருந்து துடையூருக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் முழுமையாக மழை நீர் சூழ்ந்து நிரம்பி விட்டது.
இதை அறியாத ஓசூரில் பணிபுரியும் பெண் மருத்துவர் சத்யா தனது மாமியாருடன் காரில் பயணித்த பொழுது கார் நீரில் மூழ்கியுள்ளது. காரில் பயணித்த சத்யாவின் மாமியார் கார் கதவை திறந்து நீச்சலடித்து வெளியேறிய நிலையில், சத்யா சீட் பெல்ட் போட்டு இருந்ததால் தப்பிக்க முடியாமல் காரிலேயே இருந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற நபர்கள் டிராக்டர் உள்ளிட்ட உதவிகளுடன் கயிறு கட்டி இழுத்து காரில் இருந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் மருத்துவர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த தரைபாலத்தை மூடி அதை மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொட்டும் மழையில் வெள்ளிக்கிழமை இரவு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில்:- ஆளில்லா ரயில்வே கேட்டை மூட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய ரயில்வே துறை இந்த தரைப்பாலத்தை சுமார் ரூ.3 கோடி மதிப்பில் அமைத்துள்ளது. பாலம் அமைக்கும் போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு பலகட்ட போராட்டத்தை நடத்தியுள்ளோம். முறையாக ஆள் நியமித்து மழை நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. கட்டிய தரைப் பாலமும் தரமற்ற முறையில் அமைந்துள்ளதால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்தும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த தரைப்பாலத்தில் பெண்கள் மற்றும் குடும்பத்தினரோடு செல்லும்போது வழிப்பறி, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே, உடனடியாக இந்த பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு தரமான முறையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *