• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை மக்களவையில் வெளியிட்ட ராகுல்காந்தி..!

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 7) மக்களவையில் வெளியிட்டார்.


டெல்லியில் நடந்த போராட்டத்தில், விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த பதிவும் அரசிடம் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் பதிலால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தார்.


அந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி இந்த சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததுடன் ,செய்த தவறுக்காக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதன் மூலம் அவர் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.


அப்படி என்றால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்று கேட்டதற்கு தங்களிடம் பதில் இல்லை என்று கடந்த 30ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் கூறினார்.


பஞ்சாப் மாநில அரசு போராட்டத்தில் உயிரிழந்த சுமார் 400 விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களில் 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கியுள்ளது. என்னிடம் அதற்கான பட்டியல் உள்ளது என்று கூறி அந்த பட்டியலை மக்களவையில் வெளியிட்டார்.


மேலும் அவர், விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.