பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இன்றுகாலை அமலாகத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜராக உள்ளார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். டெல்லிக்கு வருமாறு அனைத்து காங்கிரஸ் எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, மத்திய அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கட்சி மீண்டும் டெல்லி காவல்துறையை அணுகியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் பேரணிக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.