• Fri. Apr 19th, 2024

குவாரிகள் இயங்க அனுமதிக்க கூடாது: அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. அரசு தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த வளத்தையும் சூறையாடிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதா என்ன? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகள் இயங்க மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்துள்ளதை தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை மீறுவதாக உள்ளது. கடந்த 2002 ஜனவரி மாதம், தேசிய பூங்கா மற்றும் சரணாலயங்களைச் சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட வனமண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் வெளியிடப்பட்டன. 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், பாதுகாக்கப்பட்ட வனமண்டலங்களை உருவாக்க புது விதிமுறைகளை வெளியிட்டது.
கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட், 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை பாதுகாக்கப்பட்ட வனமண்டல விதிமுறைகளை அனைத்து மாநில அரசும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை வெளியிட்ட அரசாணையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயக்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற்று, தற்போது மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் குவாரிகளிடம் இருந்து வசூல் வேட்டையை தொடங்க உருவாக்கப்பட்ட வழிமுறைதான் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை. தடை விதித்தபின் அனைத்து குவாரி முதலாளிகளிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ள தி.மு.க., தற்போது வசூல் முடிந்தவுடன் தாங்கள் பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் கோரிக்கையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *