அதிமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து கட்சி பெயர், கொடியை பயன்படுத்தினால் அவதூறு வழக்கு தொடரப்படும் என, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சி பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வைத்தார். ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று, ஓபன்னீர்செல்வம் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அத்துடன், கிறிஸ்துமஸ் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என குறிப்பிடுவது குறித்தும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து கட்சி பெயர், கொடியை பயன்படுத்தினால் அவதூறு வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.