• Thu. Apr 25th, 2024

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது- நிர்மலா சீதாராமன்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் கோரி, மத்திய அரசு துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதற்கு மக்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. மாநிலங்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எரிபொருள் விலை, உரம் விலை போன்ற வெளியுலக காரணங்களால், பணவீக்கம் அதிகரிக்கிறது. இருப்பினும், மொத்தவிலை பணவீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 6 சதவீதத்துக்கு மேல் இருந்த சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளால், தனியார் மூலதன செலவு அதிகரித்து வருகிறது. வரிவசூலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், துணை மானிய கோரிக்கையில் கோரப்பட்ட தொகையை திரட்ட முடியும். வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள், 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனாவை எதிர்கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *