புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இன்று இரண்டாண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளால் திருவிழா நடைபெறாமல் முன்கூட்டியே தேரோட்டம் மட்டும் பொதுமக்கள் இல்லாமல் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமர்சையாக நடைபெறாத நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் இந்தாண்டு கடந்த மாதம் 27ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின்னர் இம்மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பின்னர் தினசரி அம்மன் அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்துதல், காவடி பறவைக் காவடி எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
பின்னர் மாலை 3 மணிக்கு கோயில் முன்பு மா, பலா, வாழை என முக்கனிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க மங்கல இசை முழங்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.மு.செல்லபாண்டியன்திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதன் பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எப்போதும் இல்லாத வகையில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா மற்றும் ஓம் சக்தி பராசக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது கோயிலைச் சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்து பின்னர் கோவில் முன்பு நிலை நின்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தேர் செல்வதற்கு இடையூறாக இருந்த ஒயர்களை துண்டித்து விட்டு பின்னர் சென்ற பிறகு அதை சரி செய்தனர். மேலும் இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் நீர் மோர் பந்தல் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது.