பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பயணிகளுக்கு போதிய பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் வால்பாறையில் இருந்து வெளியூர் சென்று வசிக்கும் பொதுமக்கள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் காலை 5 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் புதிய பேருந்துகள் இயக்கவில்லை. இதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் புதிய பேருந்து நிலையம் முன்புறம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் அரசு அதிகாரிகளோ, காவல்துறையினரோ மறியல் நடைபெற்ற இடத்திற்கு வராததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக கடமையாற்ற வந்த பொதுமக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர் இதனால் சுமார் 3 மணி நேரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.