பாமக நிறுவனர் ராமதாஸ்,பாமக தலைவர் அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த நிலையில் சென்னையில் அன்புமணி மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் பாமகவின் இலக்கு. இதனால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும். நமக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது. பாமக தலைவர் அன்புமணி பேச்சு,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே சில தினங்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.

அதில் அரசியல் கட்சி கூட்டணிகள் குறித்தும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தார். இந்தநிலையில் இன்று திடீரென சென்னை சோழிங்கநல்லூர் தனியார் மண்டபத்தில் பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பாமக மாவட்ட நிர்வாகிகளை குழுக்களாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது, கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும், தமிழ்நாடு முழுவதும் அன்புமணி சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள் பற்றியும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
இன்று நடைபெறும் அன்புமணி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
அதேபோல் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார் அதில் ஜிகே மணி போன்ற மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் குறைவான அளவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அன்புமணியின் அழைப்பை ஏற்று 11 மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் பாமக அன்புமணியின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக அக்கட்சியினர் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி நிர்வாகிகள் இடையே உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது,
புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் இருக்கின்ற உறுப்பினர்களை புதுப்பித்தல் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது, தற்போது வரை ஐந்து மாவட்ட செயலாளர்கள்,தலைவர்கள், ஒன்றிய, பேரூர், ஊராட்சி அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இது ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒரு முறை நடைபெறும் சாதாரண ஆலோசனை கூட்டம் தான், கட்சி நிர்வாகிகள் இந்த வேலைகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நான் கிடையாது நீங்கள்தான் அனைத்தும், நீங்கள் இல்லை என்றால் கட்சி கிடையாது. உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக செயல்படுவது எனது கடமை, உங்களுடைய அன்பு, பாசம் அது ஒன்றே எனக்கு போதும்.
இன்று காலை 5 மாவட்டம் மாலை 5 மாவட்டம், என மூன்று நாட்களுக்கு மாநில,மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்.
நம்முடைய இனமான காவலர் சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் கொள்கைகள் வழிகாட்டிகள் சமத்துவம் சனநாயகம் அதை மனதில் நிறுத்தி அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம்,அதில் முதலில் உங்களின் ஒருவனாக நான் செயல்படுவேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் பாமகவின் இலக்கு, இதனால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும் நமக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது.
இது உட்கட்சி விவகாரம் இங்கு எதையும் எதிர்பார்த்து ஊடகங்கள் வர வேண்டாம், விரைவில் உங்களை தனியாக சந்தித்து பேசுகிறேன்.