

பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 3 ரூபாய் மட்டும் குறைத்துள்ளார்கள்.பாஜக ஒரு கோரிக்கை வைத்துள்ளது. திமுக அதன் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். ஜூன் 30-ம் தேதிக்குள் திமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை திமுக வாக்குறுதி அளித்தபடி குறைக்காவிட்டால் ஜூன் 20ல் தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் இருப்போம். ஜூன் 30-ம் தேதி திருச்சியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்படும்.பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அவர் பிரதமர் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்த முடியும் என்று தான் கூறியுள்ளார்.
எங்கேயாவது பிரதமர் ரூ.15 லட்சம் தருவதாக கூறியுள்ளார் என்பதை அமைச்சர் பெரியகருப்பன் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து, வாக்குகளை பெறுவதற்கு பெயர் தான் திராவிட மாடல். தமிழகத்தில் பிரிவினைவாத திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான். தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக அரசு ஒவ்வொரு துறையிலும் ஊழல் புரிந்து வருகிறது. இந்த ஊழல் அரசை விரட்டி அடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
