கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; ‘தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், தமிழகத்தில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.
அதனடிப்படையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில், ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.
பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளை தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு, பத்திரிகையாளர் நல வாரியக் குழு ஒன்றை அமைத்து, அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பின்வருமாறு நியமித்து அரசு ஆணையிடுகிறது.
இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்/துணைச் செயலர் உள்ளிட்டோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன்), பி.கோலப்பன் (தி இந்து), எஸ்.கவாஸ்கர் (தீக்கதிர்), எம்.ரமேஷ் (புதிய தலைமுறை), லட்சுமி சுப்பிரமணியன் (தி வீக் வார இதழ்) ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசாணையின்படி, பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரியம் புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், நீதிப் பேராணை மனு என் 32091/2019-ன் மீதான மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.