தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால், இன்று தொடங்கவிருந்த பாலிடெக்னிக் பட்டயத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், நேற்று முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அந்த வட்டத்திற்குள்ளான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெற இருந்தன. அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, முதல் மற்றும் 2ம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கும் இன்றைய தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.