• Tue. Mar 21st, 2023

பூச்சாண்டி- திரைப்பட விமர்சனம்

நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேகே விக்கி.முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா அவரே கதையின் நாயகனாக இருக்கிறார்.

ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வமாக இருக்கும் மிர்ச்சி ரமணா மதுரையில் இருந்து மலேசியா சென்று அங்கு நடந்த ஒரு அபூர்வ நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்கிறார். தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகநாதன், கணேசன் மனோகரன் மூவரும் நண்பர்களாக இருக்க, கால்கள் செயலற்று இருக்கும் மாற்றுத் திறனாளியான லோகநாதன் இருப்பிடத்தில் தங்கி இருக்கிறார்கள். அங்கு அவர் புராதன பொருட்களை ஆர்வத்துடன் சேகரிப்பவராக இருக்கிறார்பொழுது போகாத ஒருநாள் இரவில் ஆவிகளுடன் பேச முடிவெடுத்து ஒரு முயற்சியில் மூவரும் ஈடுபட மல்லிகா என்ற 23 வயது பெண்ணின் ஆவி அவர்களிடம் பேசுகிறது. நதி நீரில் மூழ்கி இறந்ததாக அந்த ஆவி சொல்ல அதை கேள்விப்பட்ட ஆர்வத்தில்தான் மிர்ச்சி ரமணா மலேசியா செல்கிறார்.

இறந்து போன மல்லிகாவை தேடிச் செல்லும் இடத்தில் அடுத்தடுத்து ஆச்சரியங்கள் அவர்களுக்காக காத்திருக்க முடிவில் ரமணாவே சம்பந்தப்பட்ட ஆவிக்கு பலியாகும் நிகழ்வு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்னொரு ஆரம்பம் இருப்பதாக முற்றுப்பெறாமல் முடிகிறது படம்.குரல் வசீகரமும் உச்சரிப்பு சுத்தமாகவும் இருக்கும் மிர்ச்சி ரமணா கதையை நகர்த்திச் செல்லும் நாயகனாக மிகப் பொருத்தமாக இருக்கிறார். மல்லிகாவின் பின்னணியில் இருக்கும் மர்மம் அறிந்து அந்த பிரச்சனையை முடிக்கும் நேரத்தில் அவர் வேறு முடிவெடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
படம் முழுவதும் பதட்டப்படாமல் ஆவியுடன் பேசி அங்கேயே குடியிருக்கும் தினேஷ் கடைசி நேரத்தில் ரமணாவின் தலைவிதியையே மாற்ற நினைப்பது அதைவிட அதிர்ச்சி திருப்பம். அந்த கேரக்டருக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார் அவர்.மாற்றுத்திறனாளியாக வரும் லோகநாதன் உண்மையிலேயே அப்படிதானா என்ற சந்தேகம் நமக்கு எழும் அளவுக்கு இயல்பு. கடைசிவரை பெரிய அதிர்ச்சி எதையும் காட்டிக் கொள்ளாமல் இறுதியில் தன் பிரச்சனை குறித்து பேசும் போது கண் கலங்க வைத்து விடுகிறார்.கதையின் மையப்புள்ளியான மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் படத்தில் சொல்லப் படுவது போலவே சமந்தாவின் சாயலில் இருக்கிறார்
படத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரமான தினேஷினியும் திருத்தமான அழகில் கவர்கிறார்.
இந்த திரில்லர் மற்றும் ஹாரர் கதைக்குள் ராஜேந்திர சோழனின் வரலாற்றையும், களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் உள்ளே வைத்து அது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் செய்து இந்த ஸ்கிரிப்டை எழுதி இருக்கும் இயக்குனர் ஜேகே விக்கியின் முயற்சி அபாரமானது. சின்ன பட்ஜெட் முயற்சியிலேயே இவ்வளவு பிரமிப்பான படத்தை அவரால் தர முடிகிறதென்றால் பெரிய பட்ஜெட்டும், முதல் நிலை நட்சத்திரங்களும் கை கொடுத்தால் பாகுபலி போன்ற முயற்சியை இவரால் உரசிப் பார்க்க முடியும் என்றுதோன்றுகிறது.பிரச்சினைக்குக் காரணமான ஆவியின் சொந்தக்காரர் ஒரு சிறந்த சிவபக்தராக இருக்க, அவர் ஏன் இப்படியான கொடுமைகளை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளிவரக் கூடும் என்று தெரிகிறது. .அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு ஒளியை விட இருளை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷாவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *