



பல்லடத்தில் சில தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் போக்குவரத்தை காவலர் சீர் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின்சார வினியோகம் தடைப்பட்டது. அப்போது பல்லடம் நான்கு ரோடு சந்திப்பில் மின் தடை காரணமாக சிக்னல் செயல்படவில்லை. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் குணசேகரன் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தினை சீர் செய்து வந்தார்.

பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் சந்திக்கும் பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் கனமழையில் போக்குவரத்து காவலர் குணசேகரன் போக்குவரத்தினை சீர் செய்த காட்சிகளை வீடியோ எடுத்த ஒரு வாகன ஓட்டுனர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொட்டும் மழையில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் போக்குவரத்தினை சீர் செய்த காவலருக்கு பொதுமக்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


