• Thu. Apr 24th, 2025

தூத்துக்குடி பிரபல ரவுடி தப்பிக்க முயற்சி- துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!

ByP.Kavitha Kumar

Mar 21, 2025

சென்னையில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களைக் கடத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிக்க சிலர் முயற்சித்தனர். இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மகாராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மகாராஜாவை கைது செய்தனர். இதனைடுத்து, போலீசார் மகாராஜாவை இன்று (மார்ச் 21) அதிகாலை சென்னை அழைத்து வந்தனர். இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசாரிடம் மகாராஜா தெரிவித்தார். இதனால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு மகாராஜாவை போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது, தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு மகாராஜா தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காவல் உதவி ஆய்வாளர் மகாராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்து சுருண்டு விழுந்த ஹைகோர்ட் மகாராஜாவை கைது செய்த போலீசார், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.