

உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலிக்காக வாலிபர் ஒருவர், யூடியூப் பார்த்து தனது வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பாபு ( 32). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், வயிற்று வலிக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், யூடியூப் பக்கத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை செய்வது எப்படி என ராஜு பாபு தேடிப் பார்த்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள ராஜு பாபு முடிவு செய்தார். இதற்காக யூடியூப் வீடியோவில் கூறியபடி அறுவை சிகிச்சைக்குத் தேவையான கத்தி, மருந்து, ஊசி ஆகியவற்றை மருந்து கடையில் வாங்கியுள்ளார். இதன்பின் வீட்டில் தனக்குத்தானே சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
அதற்காக வயிற்றைக் கிழித்துள்ளார். ஏழு இன்ச் ஆழத்திற்கு கத்தியால் வெட்டியதால் ரத்தம் கொப்பளித்து வருவதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் 11 தையல் போட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் ராஜு பாபு அலறியுள்ளார். இதைப் பார்த்த அவரது குடுமபத்தினர் ராஜு பாபுவை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உரிய ஆலோசனை இல்லாமல் யூடியூப் பார்த்து இப்படி தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

