கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் உள்ள அனைத்து தரப்பு போலீசாரும் மனுக்களை கொடுத்தனர்.

போலீசார் கொடுத்த மனுவில் உரிய நேரத்தில் பதவி உயர்வு வராதது, ஊதிய முரண்பாடுகள், சிறுசிறு குற்றங்களுக்கான தண்டனைகள் இருந்து விலக்கு, பணி இடமாற்றம் போன்ற பல்வேறு தரப்பு குறைகளையும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதேபோல் ஓய்வு பெற்ற காவலர்களும் தந்த பென்சனில் உள்ள குளறுபடிகளை குறித்து மனு கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து 145 காவலர்கள் இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் ஒரு நாள் முகாமில் மனு கொடுத்துள்ளனர்.
மேலும், 1986ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு பின்னால் 1994 ஆம் ஆண்டு பணிக்கு வந்தவர்களுக்கு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்து உள்ளது. ஆனால் முறைப்படி எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியில் காவல்துறையில் நடந்த முரண்பாடுகளை போலீசார் மனுகளாக கொடுத்தனர். 2006 ஆம் ஆண்டு 1055 அரசு ஆணைப்படி பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவலர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் முக்கியமாக நடத்தப்பட வேண்டிய ஒன்று அவர்களுடைய பிரச்சனைகள் மாவட்ட அளவில் தீர்க்கப்படும். இன்று ஒரே நாளில் எல்லா காவலர்களுக்குமான பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே அவருடைய பிரச்சனைகள் தீரும் வரை இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும் என கூறினார்.