பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசியுள்ளார். ‘வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள்.’ என்று பேசியுள்ளார்.
களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிடர்களின் உரிமை. வள்ளுவர் யார், வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான். வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் இந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். அந்தக் குறளை தங்கத் தட்டில் இருக்கும் மலம் என பெரியார் பேசினார்.
வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? முருகன் கோத்திரத்தை வள்ளலார் சொல்லியிருக்கிறார். வள்ளலாரை விட மிகச் சிறந்த இந்து உண்டா? உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை பற்றி இழிவாக அழிப்பேன் என்று பேசினார். அதற்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று நீதிமன்றமே சொல்லியுள்ளது. களவாடுவது கள்ள ரயில் ஏறி வருவது திராவிட மாடல் தான், அதில் நாங்கள் போட்டி போட வரவில்லை. எனவே முதல்வர் சரியாக பேச வேண்டும். அரிட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்புக்கு இன்னும் 24 மணி நேரம் ஆகட்டுமே இருந்தால் உங்கள் குடிகெட்டுப் போய்விடுமா?
நான் முன்னேற்றத்துக்கு எதிரானவன் அல்ல என்று விஜய் பேசுகிறார். விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தம் வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையம் அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சினைகள் புரிவதில்லை.
தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவெரா பத்தி முதலில் பேசியது பாஜக தான். ஈவெரா தேசத் துரோகி. அவர் 1947 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர். அவர் தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா” என்று அவர் கூறினார்.