சீமான் அவர்கள், என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ஆனால் அதற்கே ஆதாரம் கேட்கிறார் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான் என தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஜனவரி 19- ம் தேதியன்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, “சங்ககிரி ராஜ்குமார் 15 ஆண்டுகளாக எங்கு சென்றிருந்தார்? அந்தப் படம் எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” எனக் கேட்டார்.
இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள். 15 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சீமான் கேட்டுள்ளார். அதுவே ஒரு ஆதாரம் என்று தான் எடுத்து காட்டுகிறோம் அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து காட்ட முடியும்?.
அந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்யப்பட்டது என்று டெமோ காட்ட சொல்கிறார். இணையத்தில் ஒரு படம் இப்படி தான் எடிட் செய்யப்படுகிறது என்று டெமோ காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு
தனியாக நான் ஒரு டெமோ காட்டவேண்டுமா? பிரபாகரனை பொய் என்று நான் சொல்லிவிட்டதாக சீமான் சொல்கிறார். பிரபாகரன் தான் உண்மையான தலைவர் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் வந்து நான் சொன்னது உண்மையா பொய்யா என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையே முடிந்திருக்கும். அவரை ஏன் பேசவிடாமல் தடுக்கிறீர்கள்” என்று அதில் பேசியுள்ளார்.