துருக்கி – சிரியா எல்லையில் பூகம்பத்தின் போது பூத்த பச்சிளம் குழந்தையைத் தத்தெடுக்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வருவது அனைவரையும் நெகிழ வைக்கிறது.
துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 24,000 பேர் பலியாகியுள்ளதாக கணிக்கப்படுகிறது. பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உருகுலைந்து போன துருக்கி, சிரியா நாட்டு மக்களுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி அரவணைத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக நெகிழ்ச்சிகரமான நிகழ்வு துருக்கியில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பெண் குழந்தையை பிரசவித்து உயிரிழந்துள்ளார். தொப்புள் கொடி கூட அறுபடாமல் அந்த குழந்தை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இக்குழந்தையின் தந்தை, தாய், உடன் பிறந்த நான்கு பேரும் நிலநடுக்கத்தில் பலியான நிலையில், பச்சிளம் குழந்தையை மட்டும் தூரத்து உறவினர் மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளார். அந்த குழந்தைக்கு சிறப்பான சிகிச்சை வழங்கி காப்பற்றியுள்ளனர். பேரிடரில் பூத்த இந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ‘அயா’ என்று பேர் வைத்து அனைவரும் ஆசையுடன் அழைத்து வருகின்றனர். ‘அயா’ என்றால் அரபியில் அதிசயம் என்று பொருள். மீட்கப்பட்ட இந்த குழந்தையின் செய்தி சமூகவலைத்தளம் மூலம் உலகெங்கும் பரவிய நிலையில், குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.
குவைத்தை சேர்ந்த தொலைக்கட்சி பிரபலம் உள்ளிட்ட பலரும் குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்த நிலையில், மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் காலித் அட்டாயா, குழந்தையை தற்போதைக்கு யாருக்கும் தத்து கொடுக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.