• Mon. Apr 21st, 2025

பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா

ByKalamegam Viswanathan

Apr 8, 2025

சோழவந்தான் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சோரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 18ஆம்ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 18ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 1 .4. 2025 ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளுடன் சோழவந்தானின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூத்தட்டுகளை வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இன்று காலை பால்குடம் அக்னி சட்டி நடைபெற்றது.