• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஏப.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

Byவிஷா

Apr 7, 2025

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. வரும் ஜுன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இந்தத் தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும்.
மீன்பிடி தடைக் காலத்தின் போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக நிறுத்தப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.
மீன்பிடித்தடை காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு மீன்கள் மற்றும் இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மீனவர்கள் கூறுகையில், “கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அங்கு பருவமழை தொடங்கும் சமயத்தில் தான் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அத்துடன், தற்போது மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டும் வரும் நிவராணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்” என்றனர்.