தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் சேதமான பொருட்களுக்கு மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்று அதனை மாற்றி தர வேண்டும்.
பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற ஏதாவது தவறுகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர் . அது மட்டுமல்லாமல் வகுப்பு நேரங்களில் வீடியோ எடுத்தல், ஜாதி வாரியாக பாகுபாடு செய்தல் மற்றும் உருவ கேலி செய்தல் போன்ற குற்றங்களிலும் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். அவ்வாறு செய்யும் மாணவர்களுக்கு இரண்டு முறை தக்க ஆலோசனை வழங்க வேண்டும், அவர் மூன்றாவது முறையும் தவறு செய்தால் பல்வேறு ஒழுங்கு முறைகளை கையாளலாம்.அதாவது ஐந்து திருக்குறள் பொருளுடன் எழுத வைத்தல்,பெற்றோரிடம் நீதிக்கதை கேட்டு வந்து வகுப்பறையில் சொல்ல வைத்தல், செய்தி துணுக்குகளை சேகரித்து படித்துக் காட்ட சொல்லுதல், நல்ல பழக்கவழக்கங்களை படம் வரைதல் போன்ற செய்முறைகளை தர வேண்டும்.ஒருவேளை மாணவர்கள் நான்காவது முறையும் தவறு செய்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் குழந்தையை அதிகாரியின் வழியாக கவுன்சிலிங் வழங்க வேண்டும். அதன் பிறகும் மாணவர் தவறு செய்தால் வேறு அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.