

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்கள், முறையாக வரி தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்வது அவசியமானது என்பதோடு, குறித்த காலத்தில் வரி தாக்கல் செய்வதற்கு பல்வேறு பலன்களும் இருக்கின்றன.
வரி தாக்கல் செய்யும் போது, தேவையான அனைத்து விபரங்களையும் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, வரி தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அதை ஏற்றுக்கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இப்படி, வரி தாக்கல் நிலையை அறிவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
வரி தாக்கல் நிலை:
வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளம் வாயிலாக வரி தாக்கல் நிலையை அறியலாம். இணையதளத்தில் ‘லாகின்’ செய்து அல்லது லாகின் செய்வதற்கு முன், வரி தாக்கல் நிலையை அறியலாம். லாகின் செய்த பிறகு கூடுதல் தகவல்களை பெறுவதோடு, கடந்த கால வரி தாக்கல் தகவல்களையும் பெறலாம்.

ஐந்து வகை நிலைகள்:
வருமான வரி தாக்கலுக்கு பிறகு ஐந்து விதமான நிலைகள் உள்ளன. வரி தாக்கல் செய்த பிறகு, இதை ‘வெரிபை’ செய்ய வேண்டும். வெரிபை செய்யவில்லை எனில், இது நிலுவையில் இருப்பதாக காண்பிக்கப்படும். வெரிபை செய்திருந்தால், வெற்றிகரமாக வெரிபை செய்யப்பட்டதாக காண்பிக்கப்படும்.
செயல்முறை:
வரி தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு, வருமான வரித் துறை அதன் விபரங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். பரிசீலனை நிறைவடைந்திருந்தால் அதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். தாக்கல் செய்த தகவல்களில் பிழை இருந்தால், குறைபாடு கொண்டுள்ளது எனும் தகவல் இடம் பெற்றிருக்கும். உரிய அதிகாரிக்கு வரி தாக்கல் மாற்றப்பட்ட விபரமும் தெரிவிக்கப்படலாம்.
தேவையான ஆவணங்கள்:
வரி தாக்கல் நிலையை அறிய, ‘பான் கார்டு’ அல்லது ‘ஆதார் கார்டு’ எண் மற்றும் ‘பாஸ்வேர்டு’ வாயிலாக வருமான வரித்துறை இணையதளத்தில் அணுகலாம். பின்னர், ‘இ – -பைல்’ பகுதியில் நுழைந்து, வரி தாக்கல் பகுதியில் தற்போதைய நிலையை அறியலாம்.
ஏன் அவசியம்?
வருமான வரி தாக்கல் நிலையை அறிந்து கொள்ள, பதிவு செய்த மொபைல் எண் கட்டாயம் இல்லை. ஆனால், வருமான வரி அங்கீகார எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரி தாக்கல் படிவத்தில் இந்த எண் இடம் பெற்றிருக்கும். வாழ்க்கைத் துணை சார்பிலும் இந்த தகவலை அறியலாம்.

