• Fri. Apr 18th, 2025

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர தெப்பத்தேர் திருவிழா

BySeenu

Apr 11, 2025

மேல சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் காலையும் மாலையும் யாகசாலை பூஜையும், திருவீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு பட்டீஸ்வரர் பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

அதன்பின், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில் எழுந்தருளி, கோவில் தெப்பக்குளத்தில், 11 சுற்று வந்தனர். அதன் தொடர்ச்சியாக கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தி தெப்ப தேர் திருவிழா நடைபெற்ற போது வான வேடிக்கை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.