• Mon. Apr 28th, 2025

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

ByVasanth Siddharthan

Apr 11, 2025

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் திருவிழாவாக நேற்று வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. இன்று மாலை பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிப்புச் சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மலையடிவாரத்தில் மேளதாளத்துடன் காவடிகளை சுமந்து வரும் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். மாலை 4:30 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மாவட்டம் மற்றும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று நாட்கள் கட்டணம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது கூட்டம் அதிகம் உள்ளதால் தரிசனம் செய்வதற்கு ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும் தரிசன முடிந்து, கீழே இறங்க படிப்பாதை வழியாகவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து கழகத்தின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.