• Tue. Dec 10th, 2024

மூன்றாம் பாலினத்தை சேர்ந்த கலைஞருக்கு பத்ம ஸ்ரீ விருது

Byகாயத்ரி

Nov 10, 2021

கர்நாடகாவைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் மஞ்சம்மா ஜோகதிக்கு பத்ம ஸ்ரீ விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கி கவுரவித்தார்.


2020ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் மஞ்சம்மா ஜோகதியின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில்அவருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


மஞ்சம்மா ஜோகதியை விருது பெற அழைக்ககப்பட்டபோது, எழுந்து சென்ற அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அதன்பின் குடியரசுத் தலைவர் அருகே சென்றதும் மஞ்சம்மா ஜோகதி அவருக்கே உரிய தனித்தன்மையுடன் ஆசிர்வதித்து, வாழ்த்துக்களைக் கூறினார்.

மஞ்சம்மா வாழ்த்தியதைப் பார்த்த ராம்நாத் கோவிந்த்தும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து மகிழ்ச்சியுடனும்,முகத்தில் புன்னகையுடனும் விருதைப் பெற்றார்.


கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புற கலைகளுக்கு தலைமையிடமான ஜனபடா அகாடெமயின் தலைவராக மஞ்சம்மா ஜோகதி இருந்து வருகிறார். 60வயதான மஞ்சம்மாவின் இயற்பெயர் மஞ்சுநாத் ஷெட்டி. கிராமியக் கலைகளில் சிறப்பாகத் தேறிய மஞ்சம்மாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு கர்நாடக ஜனபதா அகாடெமி விருது வழங்கியது, தனக்கு விருது வழங்கிய அகாடெமிக்கே அடுத்த 13 ஆண்டுகளில் மஞ்சம்மா தலைவராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு மஞ்சம்மாவுக்கு கன்னட ராஜ்யோத்ஷவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது.