• Mon. Apr 28th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 10, 2025

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.

‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், ‘இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி’ என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.

அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.

பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.