பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த பிரமுகர் முகமது மஜீத் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையில் ‘கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் ‘(டி.இ.ஓ.,) மற்றும் ‘ஸ்டில் கேமரா ஆப்பரேட்டர்கள்’ (எஸ்.சி.ஓ.,) பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொது வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும். இதற்கு முன் நகல் எழுதுபவர்கள் மற்றும் பிரிவு எழுத்தர்கள் இதுபோல் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பின் அவர்கள் வரன்முறைப்படுத்தப்பட்டனர். தற்போது அயல்பணி மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு நடைமுறை இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது.
அரசுப் பணியில் நியமனங்கள் மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்துகிறது. அதனிடம் பத்திரப்பதிவுத்துறை ஆலோசனை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்யாதது சட்டப்படி ஏற்புடையதல்ல. டி.இ.ஓ., மற்றும் எஸ்.சி.ஓ.,க்களுக்கு சிறப்பு தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் இல்லை. இவர்கள் ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்கின்றனர். தற்காலிக அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிவோரால் பல நடைமுறைச் சிரமங்கள் ஏற்படும். பொறுப்புணர்வு, சேவையில் தரம் இருக்காது. இதை செய்வதற்கு நிரந்தர பணியாளர்கள் தேவை.
மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. விதிகள்படி டி.என்.பி.எஸ்.சி., மூலம் ‘டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்’, ‘கேமரா ஆப்பரேட்டர்கள்’ மற்றும் பிற பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப வேண்டும். அதைத் தவிர்த்து வேறு வகையில் பதிவுத்துறையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மனு தொடர்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிவுத்துறை தலைவர் வரும் 29ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.