“21 மாநகராட்சிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர்.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடக்கிறது. தலைநகர் சென்னையில் காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் வாக்களித்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வாக்களித்தனர்.
காலை 9.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களிக்க சென்னை 122 வார்டில் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்தனர். முதல்வர் முகக்கவசம் அணிந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வரிசையில் பொதுமக்களுடன் காத்திருந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். மகாத்மா காந்தி, உள்ளாட்சி என்பது ஒரு சிறு குடியரசு என்பார். உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டால்தான் அரசு தீட்டும் திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேரும். இந்த 9 மாத காலத்தில் திமுக ஆட்சி மக்களுக்குப் பல்வேறு நன்மை செய்துள்ளது. இதனை மனதில் வைத்தே காலையில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதால் 21 மாநகராட்சிகளிலும் எங்கள் அணியே வெற்றி பெறும். கோவையில் அதிமுக நாடகம்: கோவையில் நேற்று எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. அங்கு ஒருவர் கடந்த ஆட்சியில் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் செய்தார். அவரது அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று 4 மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டவர் ராணுவம் வர வேண்டும் என்று கோரியுள்ளார். ராணுவத்தை வரவழைக்கும் அளவுக்கு அங்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடவில்லை. எல்லா ஆதாரங்களையும் வைத்துள்ளனர். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதை மூடி மறைப்பதற்காக நாடகம் நடத்தியுள்ளனர்” என்றார்.