• Tue. Dec 10th, 2024

முன்னாள் அமைச்சருடன் காவல்துறையினர் வாக்குவாதம்

கரூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அவர்களை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்த ஒரு பொருளோ பணமோ இல்லை கைப்பற்றப்படவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் திடீரென்று அதிமுக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது, போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி காவல்துறையிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதனால், பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அனைவரும் வெளியேறினர்.

இது தொடர்பாக, அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
பறக்கும் படையைச் சேர்ந்த தாசில்தார், கட்சி அலுவலகத்தில் சோதனை செய்தார். முடிவில், எந்த பரிசு பொருளும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.

பின்னர் கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து மீண்டும் அலுவலகத்தில் சோதனை செய்து எங்களை மிரட்டினர். கரூர் மாநகராட்சிக்கு 2 லட்சம் ஹாட்பாக்ஸ் மற்றும் 1000 ரூபாய் ஆளும் திமுக கட்சி கொடுத்து வருகின்றனர். அதை எந்த தேர்தல் பறக்கும் படை பிடிக்கவில்லை.

கரூர், கோவையில் பணமழை கொட்டுகிறது. அதை காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யவில்லை. கோவையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதைபோலே கரூர் மாவட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர்களை திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
‘அதிமுக வெற்றிபெற்றாலும். திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்போம். நீங்கள் செலவு செய்வது எல்லாம் வெட்டி செலவு தான்’ என அதிகாரிகளே வெளிப்படையாக வேட்பாளர்களிடம் தெரிவிக்கின்றனர். கரூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் மந்திராசலம் ஜனநாயக முறை படி தேர்தல் நடத்தமாட்டார். அவர் திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார். வெற்றி நியாயமாக இருக்காது என்று தெரிவித்தார்.