
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையம் மெயின் லைன் எனப்படும் சென்னையிலிருந்து கடலூர் சிதம்பரம் வழியாக திருச்சி மதுரை செல்லும் வழித்தடத்தில் முக்கிய ரயில்வே சந்திப்பாக உள்ளது.

தினம்தோறும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்த வழித்தடத்தில் சென்று வருகின்றன. இதில் பயணம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் வந்து செல்லும் நிலையில், சராசரியாக தினமும் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் ஜி பே, போன் பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
சில்லறை கொடுத்து டிக்கெட் பார்க்க வேண்டுமென்றால் தனியாக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. அது மட்டுமல்ல யூ டி எஸ் எனப்படும் ரயில்வே டிக்கெட் எடுக்கும் மொபைல் செயலியை பயன்படுத்தும் படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மயிலாடுதுறை விவசாய பூமி நிறைந்த விவசாயிகள் வாழும் பகுதியாகும். இங்கு ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் டிக்கெட் வழங்கும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாமர மக்கள் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தினமும் காலை வேளையில் ஒரே நேரத்தில் 6:00 மணி முதல் 8 மணிக்குள் 4 ரயில்கள் உள்ள நிலையில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது அந்த சமயத்தில் ஆன்லைன் டிக்கெட் எடுக்க தெரியாத பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ரயில்வே நிர்வாகம் நடைமுறைக்கு ஏற்ற மாறுதல்களை செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
