

மதுரை அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சியில், அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இது பழைமை வாய்ந்த கோவில் ஆகும்.
பத்து வருடங்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வந்தது. இந்த வருடம் முதல் முறையாக குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக வெள்ளியன்று நடைபெற்றது. விழாவில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில், தேவேந்திர குல வேளாளர் காந்தி நகர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் விழாவிற்கான திருப்பணிகளை, கடந்த சில நாட்களாக மேற்கொண்டனர்.
வெள்ளிக்கிழமை அன்று காலை அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை இரண்டாம் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, கலாகர்சனம், பூர்ணாகுதி, தீபாரதனை நடைபெற்றது. அதோடு எந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் என, நடைபெற்றது.
12ஆம் தேதி காலை மூன்றாம் காவயாக பூஜை, மண்டப சாந்தி, கோ பூஜை, பிரவேச பலி, திக் வந்தனம், பூர்ணாக்குதி, தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, எந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
காலை 9:15 மணிக்கு மேல் 10. 15 மணிக்குள் யாத்திர தானம் கடம் புறப்பாடு நடைப்
பெற்றது. வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்பத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மந்தை அமரனுக்கும் பால், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம் என, பல்வேறு அபிஷேகம் நடைபெற்று தீபாரணை நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில், கலந்துகொள்ள ஒத்தக்கடை மற்றும் சுற்றுப்புற இஸ்லாமியர்களுக்கு, கோயில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இக்கோயில், குடமுழுக்கு விழா, அழைப்பை ஏற்று, வியாழனன்று நடைபெற்ற விழாவில், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில், தி.மு.க ஒத்தக்கடை 12 வது வார்டு உறுப்பினரும் கோவில் நிர்வாகியுமான ராஜசேகர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சுல்தான், நகரச் செயலாளர் சித்திக் மற்றும் முத்தையா ஆகியோர் முன்னிலையில், 33 சீர்வரிசை தட்டுகளுடன், இஸ்லாமியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டு கோயிலுக்கு வியாழனன்று ஊர்வலமாக வந்தனர். மேலும், திருப்பணிக்கு நன்கொடையும் வழங்கினர். இஸ்லாமியர்களை கோயிலுக்குள் கட்டியணைத்து வரவேற்று சீர்வரிசைகளை கோயில் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்தினர்.
கோயில் குடமுழுக்கு விழாவில், சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடினர்.
ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து, மேள தாளங்களுடன் விண்ணதிர செய்தனர். ஆண்கள், பெண்கள் உற்சாகமாக நடனம் ஆடியதில் ரம்மியமாக காட்சி அளித்தது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருப்பதற்கு ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோயிலில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் அனைவரும் சாமியை காண எந்தவிதமான இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதில், ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, அரசியல் பிரமுகர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.

