ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
திறந்துவிடப்படும் நீர் தமிழகம் வந்தடைந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு சென்றுசேரும். இதனால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நான்கு தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி, தண்ணீர் செல்கிறது. கீழ் கல்பட்டறை, செராக்காபேட்டை, நெடியம், சானா குப்பம், நெமிலி உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் இருப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். அம்மம்பள்ளி அணையிலிருந்து, கடந்த இரு மாதங்களில் ஆறாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.