சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சாதாரண காலங்கள் மட்டுமல்ல விடுமுறை நாட்களிலும், சீசின் காலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்பி செல்லும் இடமாக கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா படகுகளில் சென்று பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை 8 முதல் மாலை 4 மணி வரை தினசரி சுற்றுலா படங்கள் சேவை இயக்கப்பட்டுவருகிறது. விடுமுறை காலங்கள் மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலாப் படகில் பயணிக்க டிக்கெட் பெருவதற்கு 4 மணி நேரம் வரை வெயிலில் நீண்ட கியூவில் நின்று சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டில் உள்ள சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து அரசுக்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் முறையை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்று முதல் சர்வதேச நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா படகில் செல்வதற்கு இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனை நீண்டதூரம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபட்டு உள்ளது. தீபாவளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.