• Thu. Apr 18th, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சரி தான்… இந்திய தேர்தல் ஆணையம்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஓட்டு எண்ணிக்கை என்பது வெளிப்படையான செயல். அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

2004 முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2019 முதல் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் விவிபாட்-ஐ பயன்படுத்தத் துவங்கியுள்ளோம். அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. வாரணாசியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டவை. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அதிகாரிகள் தெரிவிக்காதது தவறு. சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளதை தெளிவுப்படுத்திய பிறகே, அரசியல் கட்சியினர் திருப்தி அடைந்தனர்.

ஓட்டுகள் பதிவான எந்த மின்னணு இயந்திரங்களையும் ஸ்ட்ராங் ரூமில் இருந்து எடுக்க முடியாது. ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தேர்தல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 5 மாநிலங்களிலும் 2,270 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் ‘உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்’ என்னும் செயலி, தேர்தல் ஆணையத்தின் வெற்றிகரமான முயற்சியாகும். குற்றப் பின்னணி கொண்டவர்கள், வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நாங்கள் இந்த செயலியை உருவாக்கினோம்.

மொத்தம் போட்டியிட்ட 6,900 வேட்பாளர்களில் 1,600க்கும் மேற்பட்டவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனையாகும். ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *