• Thu. Apr 25th, 2024

4 மாநிலங்களில் பாஜக முன்னிலை

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முன்னிலை நிலவரம்

உ.பி: ஆரம்பநிலை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டியபடியே உ.பி.யில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த இடத்தில் சமாஜ்வாதி இருக்கிறது. 403 தொகுதிகளில் பாஜக 190, சமாஜ்வாதி 73 என ஆரம்பநிலை முன்னிலை நிலவரம் இருக்கின்றது. இதுவரை காங்கிரஸ் வெறும் 3 இடங்களில் முன்னிலை வகிக்க, பகுஜன் சமாஜ் கட்சி 5 என்றளவில் உள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு க்ளீன் ஸ்வீப் என்று கூறியபடியே நிலைமை அக்கட்சிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஆம் ஆத்மி 55, காங்கிரஸ் 16 என்றளவில் முன்னிலை நிலவரம் இருக்கின்றது. பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

கோவா: கோவாவில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் பாஜகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கின்றன. தொங்கு சட்டசபை என்று கருத்துக்கணிப்புகள் கைகாட்டியுள்ள நிலையில், பாஜக முன்னிலை வகிக்கிறது. அண்மை நிலவரப்படி கோவாவில் பாஜக 13, காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கோவாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பெற்றுவிடும்.

உத்தராகண்ட்: உத்தராகண்டில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட நிலையில் ஆரம்பநிலை வாக்கு நிலவரம் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக சென்றிருந்தாலும்கூட தற்போது அங்கு பாஜக நிலவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அண்மை நிலவரப்படி பாஜக 35, காங்கிரஸ்: 20, ஆம் ஆத்மி 1 என்ற நிலையில் உள்ளது.

மணிப்பூர்: 60 சட்டப்பேரவைகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆரம்பநிலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 11, காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் எதிர்பார்த்தது போல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பலப்பரீட்சயைக் காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *