பஞ்சபூத தலங்களில் முதன்மையாக விளங்கும் திருவண்ணாமலையில்,; ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்கள் விழாக்கள் நடைபெறும். இதில் முதன்மையான விழாவாக கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விழாவின் இறுதி நாளில் மலையில் தீபம் ஏற்றும்போது பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இந்தாண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கிய நிலையில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஊர்க் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் வழிபாடு கடந்த 7 ஆம் தேதியும் கோயில் காவல் தெய்வமான பிடாரி அம்மன் உற்சவம் 8 ஆம் தேதியும் விழா சிறப்பாக நடைபெற வேண்டி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி துர்க்கை அம்மன் கோவில் மண் எடுக்கும் வைபவங்கள் நேற்றும் நடைபெற்று முடிந்தன.
இதனை தொடர்ந்து விழா தொடங்கும் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளின் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கொடிமரத்தில் காலை 6.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இசைக்க தாளங்கள் முழங்க பக்தர்கள் பக்தி கோஷமிட கொடியேற்றம் நடந்தது.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினசரி காலை அம்பாளுடன் சந்திரசேகரும் பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கோவிலில் சுவாமி சன்னதியில் பரணி தீபமும் மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த கொடியேற்றத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கிரன் சுருதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.