• Fri. Apr 26th, 2024

ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதி – தமிழகத்தில் அறிமுகம்

Byமதி

Nov 30, 2021

கொரோனாவை விட அதிக ஆபத்து உடையது என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், 13 நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டேக்பாத் என்ற கிட் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். டெல்டா, பீட்டா மட்டுமின்றி ஒமைக்ரான் வைரசும் இந்த கருவி மூலம் 3 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்படுமாம். 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய 1.3 லட்சம் செலவாகும். இந்த கிட்டுகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் 12 ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநில பொது சுகாதார ஆய்வகத்தின் துணை இயக்குனர் ராஜு கூறுகையில், ” மரபணு பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு படி முன்னாலேயே மரபணு மாற்றங்களை தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை நமக்கு உதவுகிறது. விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் தற்போது இந்த வசதி உள்ளது” என்றார்.

சென்னையில் மாநில பொது சுகாதார ஆய்வகம், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, கோவை ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி என 12 ஆய்வகங்களில் டேக்பாத் கிட் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *