• Sat. Apr 20th, 2024

கோவை அ.தி.மு.க.வில் புது வியூகம்..!

Byவிஷா

Apr 23, 2022

அதிமுகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எஸ்.பி.வேலுமணி புதிய வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த கட்சியினரும் செயல்பட்டு இருக்கின்றனர். இவரது சிறப்பான செயல்பாடுகள் தான், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக ஸ்வீப் வெற்றியை பெற்றது. ஆட்சியை இழந்தாலும் கோவையின் வெற்றி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிதும் ஆறுதல் அளித்தது.
கொங்கு மண்டல அதிமுக முழுவதும் எடப்பாடியின் கண் அசைவில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈபிஎஸ் ஆதரவாளராக வேலுமணி இருந்தாலும், கட்சியின் எந்தவொரு தலைவரையும் பகைத்து கொள்வதில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் தொழில் வளத்தை விரிவுபடுத்தி வைத்திருக்கும் வேலுமணி, அனைத்து தரப்பினரையும் அனுசரித்து செல்லவே விரும்புகிறார். தற்போதைய அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எஸ்.பி.வேலுமணி தான் இருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த போது, அவர் தயவால் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று கூட கணக்கு போட்டதாக பேச்சு அடிபட்டது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முக்கிய நகரங்களில் கவுன்சிலர்கள் வெற்றி பெற நிறைய செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது அவருக்கான ஆதரவு வட்டத்தை பெரிதுபடுத்தியுள்ளது. இதனை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவின் போது வேலுமணியை புகழ்ந்து பதவியேற்றதன் மூலம் புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தனிக்காட்டு ராஜாவாக திகழும் வேலுமணி, அதிமுக உட்கட்சி தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்கி கச்சிதமான வெற்றியை பெற வைத்துள்ளார்.
இதையடுத்து புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகரம், பகுதி மற்றும் வார்டு கழக செயலாளர்களாக போட்டியிட்டு தேர்வானவர்கள் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான “இதய தெய்வம் மாளிகை”யில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றனர்.
அப்போது புது வியூகத்தை கையிலெடுத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதை வெற்றிகரமாக முடிப்பார் என்று அதிமுக தொண்டர்கள் பேசுவதை கேட்க முடிந்தது. இதுபற்றி விசாரிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் அதிமுகவின் கை ஓங்கியது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தகட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டு கோவையை கைப்பற்ற வேலுமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி முக்கியப் புள்ளிகளுடன் கைகோர்த்து செயல்பட பலே வியூகம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *