• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வடக்கு வாஞ்சூர் ரசாயன தொழிற்சாலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 21, 2026

காரைக்கால் மாவட்டம் வடக்கு வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், அண்மையில் ஏற்பட்ட ரசாயன விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிராம மக்கள் இன்று தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17-ஆம் தேதி வடக்கு வாஞ்சூரில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் ரசாயன வாயு கசிவால், குழந்தைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் ஒரு பெண் தற்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு வாஞ்சூர் கிராம மக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, “ரசாயன தொழிற்சாலையை மூட வேண்டும்”, “பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், சமூக ஆர்வலர் வி.எம்.சி.வி. ஐயப்பன், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமார், உதயசங்கர், பிச்சைக்காரன், மூர்த்தி, வாஞ்சிநாதன், மொழிலன் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தால் பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தொழிற்சாலையில் சர்வதேச தரத்திற்கு இணையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொழிற்சாலையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் முழுமையான ஆய்வு செய்து நம்பகமான அறிக்கை வெளியிட்ட பின்னரே மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சூழல் தொடருமானால், வடக்கு வாஞ்சூர் கிராம மக்களுக்கு மாற்று இடத்தில் குடியிருப்புகள் அமைத்து வழங்க வேண்டும் அல்லது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த ரசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.